இந்தியாவில் பெருகி வரும் கடத்தல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்களை குறிவைத்து போதைப் பொருள், தங்கம் போன்றவைகள் பெருமளவில் கடத்தப்படுகின்றன. வளைகுடா நாடுகளிலிருந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், போதைப் பொருட்கள் இந்தியாவிற்கு கடத்தி வரப்படுகின்றன.
குஜராத், மும்பை துறைமுகங்களில் சமீப காலங்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிப்பட்டன. கேரள மாநிலத்துக்கு உட்பட்ட லக்ஷதீப் தீவுகளில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிப்பட்டன. மும்பை துறைமுகத்தில் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிப்பட்டது.
அதேபோல விமான நிலையங்களில் பிடிபடும் சட்டவிரோத தங்கத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து தங்கம் சட்டவிரோதமாக கடத்தி வரப்படுகின்றன. பிற நாடுகளிலிருந்து குறிப்பிட்ட அளவு தங்கம் கொண்டுவரலாம் என்ற விதி இருந்தாலும் அதைமீறி அளவுக்கு அதிகமாக கடத்தி வரப்படுகின்றன.
சமீபத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து கேரளாவிற்கு கடத்திவரப்பட்ட சட்டவிரோத தங்கத்தால் பெரும் அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. தங்கக் கடத்தலில் பிடிப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இதில் பங்கிருப்பதாகவும், முதல்வர் அலுவலகம் மூலம் தமக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறி பெரும் அதிர்ச்சியை உருவாக்கினார். இவ்வாறு நாட்டில் போதைப் பொருள், தங்கம் போன்றவைகள் கடத்திவரப்படுவது மிகவும் கவலையை அளிக்கிறது.