இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதை: அதிகபட்ச வேகம் மணிக்கு 1100 கிமீ.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

சென்னை ஐஐடி, தையூர் கண்டுபிடிப்பு வளாகத்தில் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதையின் வேலைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. போக்குவரத்து தொழில்நுட்பத்தில் முக்கியமான முன்னேற்றமாக, ஐஐடி மெட்ராஸ் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் அதி நவீன போக்குவரத்து அமைப்புகளுக்கான முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.இந்த நிகழ்வுக்கு தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார், இதில் “இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை (410 மீட்டர்) நிறைவடைந்தது. ஐஐடி மெட்ராஸ்-டீம் ரயில்வேஸ், அவிஷ்கர் ஹைப்பர் லூப் குழு, TuTr ஆகிய புதிய படைப்பாளிகளுக்கு பாராட்டுகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முதல் வெற்றிட ரயிலை உருவாக்க ஐஐடி மெட்ராஸ் குழுவும், TuTr இன் இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இது வெற்றிடத்தில் (vacuum) மிகக் குறைந்த காற்றழுத்த சூழலில் செயல்படும் காந்த விசை அடிப்படையிலான முதல் முன்னணி முயற்சியாகும். இந்த சாதனையை உருவாக்க, சென்னை ஐஐடி, இந்திய ரயில்வே மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தியுள்ளன. அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழுவில் ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் 76 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் உள்ளனர். ஹைப்பர்லூப் ரயில்கள் மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் இயக்கப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் செயல்பாட்டு வேகம் மணிக்கு 360 கிமீ ஆகும். ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் என்பது காற்றழுத்தம் குறைக்கப்பட்ட குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியை பயன்படுத்தி கேப்சூல்களை அதிவேகமாக இயக்கும் முறையாகும். இதன் மூலம் ரயிலின் வேகம் அதிகரித்து, பயண நேரம் குறைக்கப்படும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதனை வணிக ரீதியில் செயல்படுத்துவதற்கான பல சவால்கள் உள்ளன என கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *