விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடைபெற்றது.ஆனால் விநாயகர் சதுர்த்தி 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இந்த நிலையில், காவல்துறை வழங்கிய அறிவுறுத்தலுக்கு ஏற்ப 21-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மாநாடு நடைபெறுவதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மாநாட்டுக்கான தேதியைப் பற்றிய அறிவிப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.

