நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்,’ என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் கூறியுள்ளார். ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, வியான்டியனில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடிய பிறகு, அவர் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சானை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, நியூசிலாந்து பிரதமர் லக்சான் கூறியதாவது: இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு தரப்பு நாடுகளின் பாதுகாப்பு, ஆழமான நட்புறவு மற்றும் பலமான உறவுகள் குறித்து விவாதித்தோம். பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு மிகவும் சிறந்ததாக இருந்தது. நான் இந்தியாவின் சிறந்த ரசிகனாக இருக்கிறேன். இந்திய நாடு எனக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் நான் பெரிதும் மதிக்கிறேன். நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இது ஒரு அற்புதமான சந்திப்பு என்றும் பல்வேறு துறைகளில், நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம் மற்றும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று நியூசிலாந்து பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸானுடன் நடந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டம் குறித்து விவாதித்தோம். இரு நாடுகளின் நட்புறவு மிகவும் முக்கியமானது. பொருளாதார கூட்டுறவு, சுற்றுலா, கல்வி மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம் என பிரதமர் மோடி கூறியள்ளார்.

