நெருங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை மாநாடு முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் மாநாட்டுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அக்.27ம் தேதிக்கு நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, கடந்த அக். 4 ம் தேதி மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டுக்கு இன்று ஒரு சில தினங்களே இருப்பதால், மாநாடு நடைபெறும் இடத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநாட்டு திடலில் சுமார் 50,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனுடன், மழை பெய்தாலும் பாதிக்காத வகையில், ஒரு சில அடிகள் உயரத்தில் பலகைகள் போடப்பட்டு அதன் மேல் இருக்கைகள் வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திக்கும் வண்ணம் 800 மீட்டர் தூரத்திற்கு நடை மேடை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதனுடன் அடிப்படையான பார்க்கிங், கழிவறை, குடிநீர், மருத்துவம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவெக முதல் மாநாட்டுக்கான பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *