பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் துர்கா என்ற தனியார் பேருந்தின் டயர் வெடித்துள்ளது.இதனால் பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 86 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பேருந்து விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்கு உதவி செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

