சென்னையில் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து காவல்துறையினருக்கான புதிய உபகரணங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு, போக்குவரத்து நெரிசலை கண்டறியும் கூகுள் அலர்ட் மற்றும் வாகன எண்ணையும், வாகனத்தின் வேகத்தையும் ஒரே நேரத்தில் அளவிடும் 10 ரேடார் கருவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், வேகமாகச் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க சென்னையில் 10 இடங்களில் ஸ்பீடு ரேடார் கன் தொழில் நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்தை கடந்தும், இரவில் 50 கிலோ மீட்டர் வேகத்தை கடந்து சென்றால் அதிவேக பயணம் என வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
