காசா பகுதியை முற்றிலுமாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; ஐ.நா எச்சரிக்கை

அரசியல் அரபு நாடுகள் உலகம் செய்திகள் நிகழ்வுகள் போராட்டம்/ கலவரம் போர் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை முழுவதுமாகக் கைப்பற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. இதில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உணவு மற்றும் தண்ணீர் இன்றி ஒட்டு மொத்த காசா மக்களும் தவித்து வருகின்றனர்.
மேலும் பிணைக் கைதிகளாக பிடித்து வந்தவர்களில் பெரும்பாலானோரை ஹமாஸ் விடுவித்த போதிலும், 29 பேர் மீட்கப்படவில்லை. இவர்களை விடுவிக்க ஹமாஸ் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. முழுமையான போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து வெளியேற வேண்டும். இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய வேண்டும், காசா மக்களுக்கு தங்குதடையின்றி உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என ஹமாஸ் இயக்கம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், காசா மீது தாக்குதலை தொடர வேண்டும் என்று கூறிய நெதன்யாகு, அந்நகரத்தை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், காசாவை முழுமையாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் ஐ.நா.சபையின் செய்தி தொடர்பாளர் Farhan Haq தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், காசாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ மற்றும் அரசியல் கட்டமைப்பை முழுமையாக அழிப்பது ஆகும். ஹமாஸ் மீதான ராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம், பிணையாக வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக ஒரு ஒப்பந்தம் செய்ய ஹமாஸை நிர்ப்பந்திக்க வாய்ப்பு ஏற்படும் என இஸ்ரேல் நினைக்கிறது. மேலும் எதிர்காலத்தில் காசாவில் இருந்து வரும் எந்தவொரு தாக்குதலையும் தடுப்பதற்காக, இஸ்ரேல் தனது எல்லையில் இருந்து காசாவிற்குள் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *