உலகம் முழுவதுமே பலவிதமான சினிமா ரசிகர்கள் உள்ளார்கள். தங்களுக்கு பிடித்தமான நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றால் அதை பல முறை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பல ரசிகர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் திரைப்படம் பார்ப்பதில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஜாக் ஸ்வோப் என்பவர் ஒரே வருடத்தில் திரையரங்கில் மட்டும் 777 திரைப்படங்களை பார்த்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வின்செண்ட் க்ரோன் என்பவர் ஒரே வருடத்தில் 715 திரைப்படங்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.
32 வயதாகும் ஸ்வோப், கின்னஸ் சாதனைக்காக தனது திரைப்படம் பார்க்கும் பயணத்தை ஜூலை 2022-ம் ஆண்டு மினியன்ஸ்: ரைஸ் ஆஃப் க்ரூ ( Minions : Rise of Gru ) என்ற திரைபடத்திலிருந்து தொடங்கி கடைசியாக ஜூலை 2023 அன்று இண்டியானா ஜோன்ஸ் ஆண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி ( Indiana Jones and the Dial of Destiny ) என்ற படத்தோடு நிறைவு செய்துள்ளார். இந்த சாதனைக்காக எல்லா திரைப்படங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்த்த ஸ்வோப், திரைப்படம் பார்க்கும் வேளையில் போனை நோண்டுவதோ அல்லது சாப்பிடுவதோ, குடிப்பதோ, தூங்குவதோ என எதையும் செய்யவில்லை. வாரத்தில் எப்படியும் 16-17 திரைப்படங்கள் வரை பார்ப்பதை இலக்காக வைத்திருந்தார் ஸ்வோப்.
இந்த வருடம் பார்த்த படங்களில் புஸ் இன் பூட்ஸ்: தி லாஸ்ட் விஷ் என்ற திரைபடத்தை மட்டும் 47 முறை பார்த்துள்ளார்.