அடுத்த தேர்தல்களில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஜனசேனா கட்சித்தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை ஜனசேனா கட்சிதலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருப்பதே எங்கள் நோக்கம். அதனால் அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும் இணைந்து போட்டியிடும்.
தற்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனசேனா கட்சி உள்ளது. பாஜக எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறையில் சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என பவன்கல்யாண் தெரிவித்தார்.
