“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!’ என்னும் இந்த ஐந்து வார்த்தைகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து புது விடியலுக்கான மாற்றத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தமிழ் மக்களின் தற்போதைய ஏக்கத்தைத் தீர்த்திருக்கிறது.
தன் மனைவியின் கண்களில் ஆனந்த கண்ணீரை நினைத்து பேருவுவகை கொண்ட முதல்வரின் குரலில் தான் பதவியேற்கும் நிகழ்வைப் பார்க்க தன் தந்தை உடன் இல்லையே என்ற ஏக்கத்தையும் காண முடிந்தது. “கட்டம் சரி இல்லை, ஜாதகம் சரி இல்லை, கிரக நிலைகள் சரி இல்லை, இவருக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பே கிடைக்காது” என்று பரப்புரை செய்தவர்களை ஐம்பத்தி நாலு ஆண்டுகால அரசியல் வாழ்விற்கும் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியைக் காட்டி முகத்தில் ஈயாட வைத்து இந்தியாவின் மொத்த கவனத்தையும் தமிழக அரசியலை நோக்கி திருப்பியுள்ளார் முதல்வர்.
அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று பெருபான்மையை நிரூபித்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் திரு மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் வழியில் கடவுள் சாட்சியாக பதவியேற்கிறேன் என்று சொல்லாமல் “உளமாற பதவியேற்கிறேன்” என்று அவர் உறுதி மொழி ஏற்ற போது திராவிட கொள்கைகள் மிளிர்ந்தன.
அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், இந்நாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் ஒரே மேசையில் அமர்ந்து தேநீர் பருகிய புகைப்படங்கள் இணையத்தில் அதிவேகமாக வளம் வந்தன.
அமைசச்சரவையில் உதயநிதிக்கு இடம் இல்லாமால் போனது பல கேலி கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அமைச்சரவை பட்டியல் வெளியானபோது பல துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து வெ. இறையன்பு (Dr V. Irai Anbu, IAS) அவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்பொழுது சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பு வகித்த பிரகாஷ் மாற்றப்பட்டு ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 10ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
“ஊரடங்கு காலங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும், அம்மா உணவகங்கள் திறந்திருக்கும்” என்ற அரசின் அறிவிப்பு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. விடியலை நோக்கி மேலும் பயணிப்போம். குறைகள் தென்படுகையில் சுட்டியும் காட்டுவோம்!
-பிரியங்கா மோகனவேல்.