கூகுளின் தரம் சிறந்த படைப்புகளில் ஒன்றான யூடியூபில் ’ஆட் பிளாக்கர்’ செயலி உபயோகித்து விளம்பரத்தை தவிர்ப்பவர்களுக்கு அந்நிர்வாகம் சிறப்பான பதிலடி கொடுக்கும் வகையில் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் வீடியோ தளமான யூடியூப் செயலி விளம்பரம் வாயிலாக தனது வருவாயை ஈட்டிவருகிறது. யூடியூப் வீடியோக்களின் இடையிடையே தோன்றும் இந்த விளம்பரங்களே யூடியூப் நிர்வாகத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. ஆனால் சில பயனர்கள் இந்த விளம்பரங்களை தவிர்ப்பதற்கு சில தொழில்நுட்பங்களை (ஆட் பிளாக்கர்) பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலி யூடியூப் வீடியோக்களில் விளம்பரங்கள் ஆரம்பிக்கும்போதே, அவற்றை தடை செய்துவிடுகின்றன. இது யூடியூப் நிர்வாகத்துக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. முன்னதாக ஆட் பிளாக்கர்களை பயன்படுத்தும் பயனர்கள் தயவுசெய்து அவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் அல்லது விளம்பரங்களை விரும்பாத பயனர்கள் கட்டண அடிப்படையிலான பிரீமியம் சந்தாதாரராக மாறிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
எனினும், கணிசமான பயனர்கள் யூடியூப் நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு இசைவதாக தெரியவில்லை. இதனிடையே, அம்மாதிரியான மூன்றாம் தரப்பு ஆட்பிளாக்கர்களை பயன்படுத்தும் பயனர்கள் முழுமையாக வீடியோக்களை காண்பதற்கு வழியின்றி யூடியூப் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. இதனால் ஆட் பிளாக்கர் பயன்படுத்தும் பயனர்கள், யூடியூப் வீடியோவை முழுமையாக காண முடியாமல் இருந்தது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆட் பிளாக்கர் பயன்படுத்தும் பயனர்களுக்கான வீடியோக்களில் ஆடியோ வசதியை யூடியூப் துண்டிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஆட் பிளாக்கர் பயன்படுத்தும் பயனர்கள் ஆடியோ இன்றியே வீடியோக்களை காண முடியும். எனவே, ஆட் பிளாக் பயனர்கள் இனிமேலாவது யூடியூபின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி யூடியூப் செயலியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
