திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவத்தை ஒட்டி, பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது. அப்போது, ஏழுமலையானின் சேனை முதல்வன் கோயிலில் இருந்து புறப்பட்டு, மேற்கு மாட வீதியில் உள்ள வசந்த மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புற்றுமண் சேகரிக்கப்பட்ட நிலையில் சேனை முதல்வனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், புற்றுமண் கலசங்கள் மாட வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது.
இந்த நிலையில் இன்று மாலை கொடியேற்றத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இதையொட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
இதைதொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பிரம்மோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் நடைபெற உள்ளது.