2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் நடைபெறுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது. 2025-26ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேருக்கு, தேசிய தேர்வு முகமை 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடந்தது, இதற்கான விசாரணையை சிபிஐ மற்றும் தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்தின. இதன் பின்னணியில், விதிமீறல்களில் ஈடுபட்ட 26 எம்பிபிஎஸ் மாணவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 2024–25 கல்வியாண்டிற்கான 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், 215 தேர்வர்களுக்கு எதிரான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

