ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகின் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் அதிகபட்சமாக கனடா அணியில் 11 வீரர்களும், அமெரிக்கா அணியில் 9 வீரர்களும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளில் தலா 7 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர நியூசிலாந்து அணியில் 2 பேர், தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், இத்தாலி, நெதர்லாந்து அணிகளில் தலா ஒருவர் என இந்திய வேர்களைக் கொண்ட வீரர்கள் பல அணிகளில் விளையாடுகின்றனர்.இந்தியாவில் பயிற்சி பெற்று அல்லது இந்திய குடும்ப பின்னணியைச் சேர்ந்த இந்த வீரர்கள், தங்கள் நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். உலகக் கோப்பை தொடரில் அவர்கள் பங்கேற்பது, இந்திய கிரிக்கெட் உலகளாவிய அளவில் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்திய வம்சாவளி வீரர்கள் அந்த அணிகளின் முதுகெலும்பாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடர், இவ்வீரர்களுக்கு உலக அரங்கில் தங்கள் திறமையை நிரூபிக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

