இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புகளில், இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பரஸ்பரம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது, பொருளாதார கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், வாஷிங்டன் டி.சி.யில் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும், இந்தியா – அமெரிக்கா பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பயனுள்ள ஆலோசனை நடைபெற்றதாகவும் கூறினார். இதேபோல், ஸ்காட் பெசென்ட் தனது பதிவில், விநியோகச் சங்கிலி பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன்களை உள்ளடக்கிய தேசிய, பொருளாதார விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார். விரைவில் கையெழுத்தாக உள்ள இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

