அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில், இந்தியா 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு.

அமெரிக்கா அரசியல் இந்திய வணிகம் உலகம் பொருளாதாரம்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில் பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாற்று வழிகளில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. திருப்பூர் உள்ளிட்ட நகரங்களின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, 40 நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்தார். அது கடந்த 7ம் தேதி அமலுக்கு வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. அதை மீறி, ரஷ்யாவிடம் இந்தியா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றம்சாட்டி, மேலும் 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.இதனால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இந்த வரி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து ஜவுளி, ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அளித்திருந்த ஆர்டர்களின் பேரில் தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு நிறுவனங்கள் வலியுறுத்தின. சில நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்தன. இதனால், திருப்பூர் உள்ளிட்ட ஆயத்த ஆடை உற்பத்தி பாதிக்கும் நிலையால், ஆலைகள், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் ஏற்றுமதி பாதிப்புக்கு இணையாகவோ, அதற்கு மேலாகவோ ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 40 நாடுகளில் கண்காட்சி, கருத்தரங்கு, வர்த்தகர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா 220க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்ட 40 நாடுகளில் இந்திய பொருட்களின் இறக்குமதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு கருதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *