இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும் அதில் ஒரு சில திருவிழாக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வருவர். அப்படி ஒரு திருவிழா தான் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரை. இந்த திருவிழா பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும். மேலும் இது உலகின் பழமையான ரத யாத்திரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்களுக்கு ஜகன்னாத் தனது மூத்த சகோதரர் பலராமன் மற்றும் சகோதரி சுபத்ராவுடன் தனது தாய்வழி அத்தை வீட்டில் உள்ள குண்டிச்சா கோவிலுக்கு செல்ல அவரது இடத்தில் இருந்து தேரில் செல்லும் பயணம் தான் ரத யாத்திரை என்று இன்றுவரை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது, இதில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
இந்தத் திருவிழா மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் ஜெகநாதர் கோவிலில் வந்தவண்ணம் இருக்கும். அதோடு இங்கு வழங்கப்படும் மஹாபிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . பூரி ஜெகநாதர் கோயிலின் பெரிய சமையல் அறையை ரசோய் மெகா கிச்சன் என்று அழைக்கின்றனர். அங்கு உணவு நீராவி மூலம் மட்டுமே சமைக்கப்படுகிறது.
ஜகன்னாத் பூரியின் சமையலறை உலகின் மிகப்பெரிய சமையலறைகளில் ஒன்றாகும். ஜகன்னாதர் கோயிலின் சமையலறையில் சமைக்கப்படும் ஒவ்வொரு உணவும் மகாலட்சுமி தேவியின் மேற்பார்வையில் செய்யப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். இதனால், இந்த சமையலறையில் தயாரிக்கப்படும் உணவு வீணாவதும் இல்லை, பற்றாக்குறையும் இல்லை என்கின்றனர்.
இத்தாண்டு ரத யாத்திரை பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. விழா ஏற்பாடுகளை ஒடிசா அரசு மிகச் சிறப்பாக செய்திருந்தது. ஓடிசா போலீசார் மற்றும் துணை ராவணுப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

