ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரையிறுதியில், தென் ஆப்ரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்துல் வீழ்த்திய ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது.14 வது ஓவரில் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி 49.4 ஓவரில் 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 50 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆஸி அணி 47.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து போராடி வென்று பைனலுக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், துபாய், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். இதன் காரணமாக, அகமதாபாத்தில் உள்ள ஓட்டல் அறைகளின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளன. ஓட்டல் அறைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சிறந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.2 லட்சமாக கட்டணம் உயர்ந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள் மட்டுமின்றி சாதாரண ஓட்டல்களும் கூட இதனைப் பயன்படுத்தி ஐந்து முதல் ஏழு மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. பொதுவாக ஒரு இரவுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் வசூலித்து வந்த ஓட்டல்கள் ரூ.20 ஆயிரம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அகமதாபாத் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு ஓட்டல் அறைகளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

