திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றாத்துடன் தொடக்கம்; நவம்பர் 26ல் மகா தீபம் ஏற்றப்படும்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் கோயில்கள் சித்தர்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை வரும் நிகழ்ச்சிகள்

திருக்கார்த்திகை தீப திருவிழா அண்ணாமலையார் திருக்கோவிலில் 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 2 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு ஓன்றன் பின் ஒன்றாக பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியவுடன் அண்ணாமலையார் சந்நதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க துலா லக்னத்தில் காலை 05:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22-ஆம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள் புரிவார்கள்.
இதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 23 ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிறைவு நாளான 10 நாள் நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published.