முல்லைப்பெரியார் அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது; தமிழ்நாடு நீர்வளத்துறை கேரளாவிற்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை விவசாயம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில், கேரளாவிற்கு தமிழ்நாடு நீர்வளத்துறையினர் முதற்கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.h
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்கிறது. குறிப்பாக இன்று (10-12-23) நண்பகல் 2 மணி அளவில் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியது. இதன் நீட்சியாக முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவிற்கு தண்ணீர் திறக்கும் 13 மதகுகளையும் நீர் சென்றடைந்தது. இந்நிலையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழ்நாடு நீர்வளத்துறையினர் முதற்கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
அணையின் நீர் மட்டம் 138 ஆவது அடியை எட்டும் போது, 2 ஆம் கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும். இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதும், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். பின்னர் 141 ஆவது அடிக்கு 2 ஆவது கட்டமாகவம், 142 ஆவது அடிக்கு 3 ஆவது கட்டமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படு, உபரி நீர் கேரளாவிற்கு திறக்கப்படும்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு நீர் திறக்கும் போது, வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடப்படும். ஏற்கெனவே கடந்த நவம்பர் 26ஆம் தேதி, வடகிழக்கு பருவமழையின் போது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதும் இதே போன்று முதற்கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *