பி.எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படைப்பு கொட்டுக்காளி. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை. அத்துடன் போட்டிப் பிரிவிலும் கொட்டுக்காளி தேர்வாகியுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகி உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
இத்திரைப்படத்தை உலகத்தரத்தில் இயக்கியுள்ள இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி அண்ணன், அன்னாபென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுக்களும்.
இதுபோன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகம் அளித்து, அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களுக்கே அனைத்துப் பெருமையும் சேரும்.’
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ்த் திரைப்படம் நமது கொட்டுக்காளி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

