வியாழக்கிழமை 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், வியாழக்கிழமை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை, வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழக உள் மாவட்ட சமவெளி பகுதிகளின் ஒருசில இடங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரையும், ஒருசில இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

