தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார்.
அவரை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அமெரிக்க வாழ் இளைஞர்கள் நடனமாடி முதலமைச்சரை உற்சாகத்துடன் வரவேற்றனர். நடிகர் நெப்போலியன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய மாகானங்களுக்கு செல்கிறார். செப்டம்பர் 2ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கிறார்.
இதையடுத்து சிகாகோவில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட முக்கிய நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும் பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். மேலும் அயலக தமிழர்களையும், முக்கிய முதலீட்டாளட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயணத்தை முடித்துக் கொண்டு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
TN CM Stalin in USA receives warm welcome in San Francisco Airport

