தீப உற்சவத்தை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது, இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தி செய்தனர்.ராமர் வனவாசத்தை முடித்த பிறகு, அயோத்திக்கு திரும்புவதை தீபாவளி மற்றும் தீப உற்சவமாக வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடுகிறார்கள். ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, அங்கு நடைபெறும் முதல் தீப உற்சவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக, ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையின் 55 படித்துறைகளில் 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. மாசுவை குறைக்க, கோயிலுக்கு வெளியே மெழுகு விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விளக்கேற்றும் நிகழ்ச்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் முறியடிக்கப்பட்டன. கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் குழுவினரும் இங்கு வந்திருந்தனர். அவர்கள் டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், சரயு நதிக்கரையில் 1,100 புரோகிதர்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீப உற்சவத்தை முன்னிட்டு சோபா யாத்ரா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 6 நாடுகள் மற்றும் 16 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இங்கு கலை நிகழ்ச்சி நடத்தினர்.அயோத்தி தீப உற்சவத்தை முன்னிட்டு, 10,000 போலீசார்களை பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தீப உற்சவத்தை காண பல ஆயிரம் பக்தர்கள் ஒன்று கூடியுள்ளனர். அவர்கள் தீப உற்சவத்தின் முழுமையான காட்சியை அனுபவிக்க, பல இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன

