தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1039வது சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. உலகளாவிய புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு 1039வது சதய விழாவுக்கான முன்னணி நிகழ்வாக, பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்பாக, பந்தக்காலுக்கு சந்தனம், தயிர், பால் மற்றும் திரவிய பொடி போன்ற பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை வழங்கப்பட்டது. பின்னர், பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் வெற்றி தமிழர் பேரவை ரா. செ. ஆகியோர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

