ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; 200க்கு மேற்பட்டோர் பலி

இயற்கை பேரிடர் உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் கடந்த திங்கட்கிழமையன்று துவங்கிய கனமழை மறுநாள் வரை கொட்டித் தீர்த்ததால், சில பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 1 மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
திடீரென பெய்த இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஸ்பெயின் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஏனென்றால், மரங்கள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு சேறும், சகதியுமாக உள்ளது. ஆகையால், பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் பேரழிவில், தற்போது வரை 205 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வலென்சியா பகுதியில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, வலென்சியா நகரில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகம் தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *