தமிழ் மொழி, கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன் என விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவேகானந்தருக்கு ஹீரோ போன்று வரவேற்பு அளித்த தமிழ்நாடு மக்கள் என விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அங்கிருந்து மெரினா வழியாகச் சாலை மார்க்கமாக விவேகானந்தர் இல்லத்திற்குச் சென்றடைந்தார். கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.