ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய தொழில்நுட்பங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, “அமெரிக்கா சில இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தியா வெளிநாடுகளுடன் வர்த்தக உறவுகளை நடத்துவதில் சரியான விதிமுறைகளை பின்பற்றுகிறது. எனவே, இந்திய நிறுவனங்கள் எந்த விதியையும் மீறவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் குறித்து தெளிவுபடுத்த அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்” என அவர் தெரிவித்தார். கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் ஆரம்பமானது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது, மேலும் ரஷ்யாவுக்கு எந்த நாடுகளும் ராணுவ உதவிகளை வழங்கக்கூடாது என அறிவித்தது. இந்நிலையில், ரஷ்யாவின் ராணுவத்திற்கு ஆதரவாக சரக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ததாக 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. டிஎஸ்எம்டி நிறுவனத்தின் இயக்குநர் ராகுல் குமார் சிங் கூறியதாவது, “எங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததற்கான காரணம் எதுவென்று புரியவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை, ஆனால் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு பாகங்களை ரஷ்யாவுக்கு வழங்குகிறோம்.” நாங்கள் இந்திய சட்டங்களை எந்தவிதமாகவும் மீறவில்லை. வழக்கமாக எங்கள் வணிகம் தொடரும் என்று அவர் கூறினார்.

