பாகிஸ்தானில் காற்று மாசு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் 19 லட்சம் மக்கள் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது, இதனால் அங்கு உள்ள மருத்துவமனைகள் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகளால் நிரம்பி விடுகின்றன. காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குதல், வாகனப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.முக்கிய நகரங்களில் காற்று மாசு கட்டுப்பாட்டில் சிக்கலான நிலைமை நிலவுகிறது. லாகூரில் காற்று தரக் குறியீடு 1000-ஐ கடந்துள்ளது. சமீபத்தில் முல்டானில் காற்று தரக் குறியீடு 2,000-ஐ மீறியுள்ளது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 0-50 என்ற அளவுக்குள் இருந்தால், காற்றின் தரம் நல்லதாகக் கருதப்படுகிறது; 51-100 (திருப்தி), 101-200 (பரவாயில்லை), 201-300 (மோசம்), 301-400 (மிக மோசம்), 401-450 (தீவிரம்), 450-க்கு மேல் (மிகத் தீவிரம்) என வகைப்படுத்தப்படுகிறது.

