இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ, தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இவை அனைத்தும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்படுகின்றன. இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் அனுப்புதல் போன்ற செயல்களில் உலக நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறன. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 இன்று நவம்பர் 19 இந்திய நேரப்படி அதிகாலை 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 4700 கிலோகிராம் ஆகும். இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கிடையில் வர்த்தக அடிப்படையில் செயற்கைக்கோளை ஏவுவது இதுவரை நடந்ததில்லை என்பதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான ராதாகிருஷ்ணன் துரைராஜ் அவர்கள், ஜிசாட்-என் 2 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

