சீனாவில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் பெருந்தொற்று மக்கள் மத்தியில் மறக்கப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மீண்டும் ஒரு வைரஸ் பரவுவதாக வந்த தகவல்கள் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மெடப்னியுமோவைரஸ் (ஹெச்.எம்.பி.வி) என அழைக்கப்படும் இந்த வைரஸ் வேகமான பரவலால் உலகநாடுகளில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தகன கூடங்களில் கூட நெருக்கடி அதிகமாகி உள்ளது. மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகின்றன. புதியதாக பரவும் ஹெச்.எம்.பி.வி வைரசுடன், இன்புளுயன்ஸ்சா ஏ, மைகோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா போன்றவை கூட பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்றின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. HMPV வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உருவாக்குகிறது, அதாவது, கொரோனாவால் ஏற்படும் அறிகுறிகளுக்கு ஒத்ததாகவே உள்ளது. இந்த வைரஸ் பரவலை சீன சுகாதாரத்துறை கவனமாக கண்காணித்து வருகின்றது. இதனால், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் நிமோனியா பாதிப்பின் அதிகரிப்பு கவலைக்குரியதாக உள்ளது.

