உலகின் மிக வயதான நபராகக் கருதப்படும் 116 வயதான ஜப்பானிய பெண் டொமிகோ இடுகோ, முதுமை மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக டிசம்பர் 29 அன்று காலமானார். கின்னஸ் உலக சாதனையின் தரவுகளின்படி, உலகின் மிக வயதான நபர் ஸ்பெயினைச் சேர்ந்த 117 வயதான பிரான்ஜாஸ் மொரேரா ஆக இருக்கிறார், அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இறந்தார். இதற்குப் பிறகு, டொமிகோ இடுகோ உலகின் மிகவும் வயதான நபராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்ததாக ஜப்பானின் தெற்கு நகரின் மேயர் ரியோசுகே தகாஷிமா தெரிவித்தார். ரியோசுகே வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகாவுக்கு அருகில் இடோகோ வாழ்ந்துள்ளார். இவருக்கு 4 வாரிசுகள் மற்றும் 5 பேரக்குழந்தைகள் உள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இவர், கடந்த மாதம் 29ஆம் தேதி உயிரிழந்தார். மே 23, 1908 அன்று பிறந்த டோமிகோ இடுகோ, 20 வயதில் திருமணம் செய்து கொண்டார், கின்னஸின் கூற்றுப்படி, இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். உலகப் போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய காலங்களில் இடுகோ வாழ்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது, தனது கணவரின் ஜவுளித் தொழிற்சாலையின் அலுவலகத்தை இவர் நிர்வகித்தார். 1979-ல் கணவர் இறந்த பிறகு, நாராவில் தனியாக வாழ்ந்தார். அந்த காலத்தில், வாழைப்பழம் மற்றும் பால் சார்ந்த குளிர்பானங்களை குடித்து, நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகிறது. உலகின் மிக வயதான நபர் யார் என்பதை ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளதுபோல, தற்போது 116 வயதான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் உலகின் மிக வயதான நபராக உள்ளார். அவர் இடுகோவிற்குப் பிறகு 16 நாட்களுக்குப் பிறகு பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

