ஆசியாவில் புதிய கரோனா அலை மீண்டும் உருவாகியுள்ள நிலையில், பொதுப் இடங்களில் செல்லும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு, உலக சுகாதார நிறுவனத்தால் 2020-ம் ஆண்டு பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கரோனா வைரஸ் தொற்று, உலகளவில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. இருப்பினும், தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசியை பரவலாக வழங்கியதன் மூலம் கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. இந்த ஆண்டில் கரோனா தொற்று மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர அறிகுறிகள் இல்லை. இந்தியாவில் இந்த ஆண்டில் கரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மேலும், விரீயம் இழந்த ஓமைக்கரான் வகை வைரஸின் உட்பிரிவுகள் ஜெஎன்1 மற்றும் எக்இசி ஆகியவை மட்டுமே காணப்படுகின்றன, புதிய உருமாறிய வைரஸ் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, அரசு கூறும் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

