கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.
வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன். அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே. அவரது ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ராஜ பார்வை’ திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று ‘கிளாப்’ அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே, கர்நாடக ரத்னா, அமரர், டாக்டர்.ராஜ்குமார் அவர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
பின்னாளில், துரதிஷ்டவசமாக டாக்டர்.ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட சமயத்தில், அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது.
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.ராஜ்குமார் அவர்களைத் தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும், அவரது புதல்வர் சிவராஜ்குமார் அவர்களைத் தனது மகனுக்கு இணையாகவும், கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் கமல்ஹாசன் . மிக சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற சிவராஜ்குமார் அவர்கள் மீது கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக, அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமார் அவர்களே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும், திரைத்துறை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் கமல்ஹாசன் அவர்களது உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து, ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என, தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம்.
எந்தக் கலையும், மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும், எல்லைகளையும் கடந்தது. அந்தக் கலையை ரசிக்கும் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட அது பொருந்தும். மொழிகள் அனைத்துமே நீடு புகழோடு வாழ வேண்டும், “அன்பும் புரிதலும் மாற்றார் பண்பாடு போற்றுதலும் மட்டுமே நம்மை இறுகப் பிணைத்து வளம் தரும் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். பேதமற்ற ஒற்றுமை பாராட்டும்” என்றார்.

