இந்திய மற்றும் உக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலம் மனியாபோலிஸ் நகரில் பிறந்தவர் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் (49). மருத்துவம், ராணுவ சேவை மற்றும் மனித விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய காலத்தில், ஆப்கானிஸ்தான் தொடர்பான ராணுவ நடவடிக்கைகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். பின்னர், 2014ஆம் ஆண்டு நாசாவில் தனது பணியைத் தொடங்கிய அவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.அனில் மேனனின் மனைவி அன்னா வில்ஹெல்மும் ஒரு விண்வெளி வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது முதல் சர்வதேச விண்வெளி பயணத்தை அனில் மேனன் வரும் ஜூலை 14ஆம் தேதி தொடங்க உள்ளார்.ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து, கஜகஸ்தானில் உள்ள பைகனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து சோயுஸ் எம்.எஸ். விண்கலத்தில் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.சுமார் 8 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க உள்ள அனில் மேனன், நீண்டகால விண்வெளி பயணங்களால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள், விண்வெளியில் ரத்த ஓட்டம் செயல்படும் விதம், திசுக்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளார்.

