இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ம் ஆண்டு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களும் சேர்க்கப்படும், என்று மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1-ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்றும் பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் போன்ற மாநிலங்களில் முதல் கட்டமாக 2026 அக்டோபர் 1-ம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் அதிகாரிகள் அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்ளவுள்ளார். அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 ஆண்டு நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது. தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படியே இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

