உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக ராக்கெட் ஏவுதலை சோதனை செய்து வெற்றியடைந்தது இஸ்ரோ.இந்தியாவில் மொத்தமாக 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ட்ரோன் உதவியுடன் ராக்கெட் ஏவுதல் சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது முதன்முறையாக, உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் ராக்கெட் ஏவுதலை இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. த்ரஸ்ட் டெக் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், 15 கிலோ எடையுள்ள ராக்கெட் 1.1 கிலோமீட்டர் உயரத்திற்கு பறந்து பாதுகாப்பாக தரையில் இறங்கியது. மேலும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 900 இளைஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளை விண்ணில் ஏவி சோதிக்க உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

