உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான ஒரு பகுதியாக, அவரது ஸ்பேஸ் எக்ஸ் என்ற வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணில் ஏவி சோதனை செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 403 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் விண்கலம் கடந்த மே மாத இறுதியில் ஏவப்பட்டது. எனினும், விண்ணில் ஏவப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விண்கலம் வெடித்து சிதறியது. கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பி வந்துள்ளது. எனினும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அதனை பாதுகாப்பாக திரும்பி வரவழைத்து கொள்ள முடியாமல் போனது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும் நோக்கில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த பரிசோதனை தோல்வியில் முடிந்தது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையருகே இந்த விண்கலம் வெடித்து விழுந்தது. இதில், மெக்சிகோவின் தமவுலிபாஸ் மாகாணத்திலும் அதன் பாகங்கள் விழுந்துள்ளன. இந்த சூழ்நிலையில், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். ராக்கெட் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றிய ஒரு விரிவான மறுஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

