கோவை வருகிறார் பிரதமர் மோடி; தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை மாநாடு முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

கோவையில் நடைபெறும் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை கொடிசியாவில் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நாளை புதன்கிழமை தொடங்குகிறது. 21ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் 1.25 மணிக்கு பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வருகிறார். கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பினை ஏற்றுக்கொண்டு, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் வந்து விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் , மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடைகிறார். பின்னர் தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் கொடிசியா வளாகம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் நாளை மாலை 6 மணி வரை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *