ஒடிசாவில் ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையின் தாக்கத்தால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். இன்று கஞ்சம் மற்றும் பூரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 67 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஏழு பேர் படுகாயமடைந்து மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆலங்கட்டி மழையின் காரணமாக மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளன. மயூர்பஞ்ச் மாவட்டத்தை தவிர, கியோஞ்சர், நபரங்பூர் மற்றும் நுவாபாடா மாவட்டங்களில் கூட இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. கடந்த 36 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் மூன்று நாள்களில் ஒடிசாவின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

