இந்தியா நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் வகையில் சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வர உள்ளது. முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2011 மக்கள் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கவும், நாடு முழுவதும் சமமான பிரதிநிதித்துவம் ஏற்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என அரசு தெரிவிக்கிறது.இந்த திட்டத்தின் படி அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகள் அதிகரிக்கப்படுகின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் 80 இடங்கள் 120 ஆகவும், மகாராஷ்டிராவில் 48 இடங்கள் 72 ஆகவும், தமிழ்நாட்டில் 39 இடங்கள் 59 ஆகவும் உயரும். இதனால் தற்போதைய உறுப்பினர்களின் இடங்கள் குறையாமல், பெண்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் சேவை மேம்படும் என்றும், ஒரு எம்.பி கவனிக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த திட்டத்திற்கு சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. சரியான உள் ஒதுக்கீடு இல்லையெனில் சிலருக்கே பயன் கிடைக்கும் என்றும், அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன. இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாக உள்ளது.

