அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்ததால், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடங்கின. இந்த போர் தொடங்கி தற்போது 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாது என்று ஈரான் அறிவித்தது. இதனால் உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பல நாடுகள் கவலை அடைந்தன. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 15 அம்சத் திட்டம் ஒன்றை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அந்த திட்டத்தை ஈரான் ஏற்காமல், தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒரு முக்கிய மாற்றமாக ஈரான் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்காசி கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை என்றும், ஈரானின் நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது என்றும் விளக்கமளித்தார்.

