எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்ததால், உலகில் முதன்முறையாக பிலிப்பைன்ஸ் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. அந்த நாடு தனது கச்சா எண்ணெயின் சுமார் 98% ஐ மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளன. இதனால் நாட்டில் எரிபொருள் கையிருப்பு வேகமாக குறைந்து, விலைகள் அதிகரித்து மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையை சமாளிக்க, அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு தற்போது 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், அரசு நேரடியாக எரிபொருள் வாங்கும் முடிவை எடுத்துள்ளது. மேலும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நிலக்கரி மின் நிலையங்களை அதிகம் பயன்படுத்தவும், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணை வழியாகவே அதிகமான எண்ணெய் வருவதால், அங்கு நிலவும் பதற்றம் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

