இத்தாலியில் இருந்து போலந்து நோக்கிச் சென்ற 12 டன் கிட்கேட் சாக்லேட் பார்கள் கொள்ளை; நெஸ்லே  நிறுவனம் அதிர்ச்சி தகவல்

உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் மோதல், கிழக்கே ரஷ்யா – உக்ரைன் போர் என உலகமே அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் உறைந்து போயுள்ளது. இந்தப் போர்களில் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் விளைவாக எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாகக் கடுமையான விலையைக் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது சர்வதேசக் கொள்ளைக் கும்பல். இத்தாலியில் இருந்து போலந்து நோக்கிச் சென்ற நெஸ்லே நிறுவனத்தின் 4,13,793 (12 டன்) கிட்கேட் சாக்லேட் பார்கள் நடுவழியில் மர்மமான முறையில் கொள்ளை போனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் நமக்கு அதிர்ச்சியளிக்கலாம். ஆனால், ஆண்டுதோறும் சுமார் €8.2 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதாக ஐரோப்பிய நாடாளுமன்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் சராசரியாக €2.5 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் மாயமாகின்றன.
சட்டத்தின் ஆட்சி, உலக ஒழுங்கு என கிழக்கத்திய நாடுகளுக்கு பாடம் எடுக்கும் ஜெர்மனியில் மட்டும், ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு சரக்கு லாரி கொள்ளையடிக்கப்படுகிறது. இதன் விளைவாக, ஆண்டுக்கு €2.2 பில்லியன் இழப்பு ஏற்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொக்கோ விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், கொள்ளையர்களின் முதல் இலக்காக சாக்லேட்கள் மாறியுள்ளன. சாக்லேட் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கொக்கோ ஆகும். இதன் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சாக்லேட் விலையும் அதிகரித்துள்ளது. உதாரணமாக, போலாந்தில் சாக்லேட்களின் சில்லறை விலை ஒரே ஆண்டில் 32.6% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொருட்களின் விலை உயரும்போது, தட்டுப்பாடு உருவாகும். கள்ளச் சந்தையில் லாபம் பெருகும்.
ஐரோப்பாவில் உணவுப் பொருட்களை திருடுவது லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. விலை உயர்ந்த மின்னணு சாதனங்களை விட, கொள்ளையர்களுக்குச் சாக்லேட்களே முதல் தேர்வாக இருக்கின்றன. ஏனெனில் சாக்லேட்கள் உடனடியாகக் கெட்டுப்போகாது; நீண்ட காலம் சேமித்து வைக்கலாம். இதற்கான சந்தை மிக பெரிது, பரவலானது. கருப்பு சந்தைகளில் இதனை வேகமாக விற்று பணமாக்கிவிட முடியும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *