இந்தியாவின் மேலும் ஆறு வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை உலக பாரம்பரிய சின்னங்களுக்கான அங்கீகாரத்திற்கான உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அசோகர் கல்வெட்டுகள் மற்றும் சௌசத் யோகினி கோயில்கள் உள்ளிட்ட ஆறு வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களுக்கான அங்கீகாரத்திற்கான தேர்வில் உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் அங்கீகாரம் பெறுவதற்காக உத்தேச பட்டியலில் வரலாற்றுச் சின்னங்களைச் சேர்ப்பது அவசியமாகும். இந்த பட்டியலில் உள்ள சின்னங்கள் எதிர்காலத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெறும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கரில் அமைந்துள்ள காங்கேர் தேசிய பூங்கா, தெலங்கானாவின் முதுமலில் உள்ள பெருங்கற்கால நெடுங்கல் (மென்ஹிர்), பல மாநிலங்களில் உள்ள அசோகர் கால கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள், வடமாநிலங்களில் உள்ள குப்த கோயில்கள், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பண்டேலா கோட்டைகள் ஆகிய 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் இந்தியாவின் சார்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தகவலை யுனெஸ்கோவின் இந்திய பிரதிநிதிகள் குழு கடந்த 7-ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது. இதன் மூலம், இந்த உத்தேச பட்டியலில் மொத்தம் 62 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்தியாவில் தற்போது வரை கலாசார பிரிவில் 35, இயற்கை பிரிவில் 7 மற்றும் இரு பிரிவுகளின் சேர்க்கையுடன் மொத்தம் 43 யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. 2024-ஆம் ஆண்டில், உலக பாரம்பரிய குழுக் கூட்டம் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்றது. அப்போது அஸ்ஸாமில் உள்ள அஹோம் வம்சத்தின் புதைகுழி அமைப்பு முறைக்கு (மொய்தம்ஸ்) யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

