நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் படத்தின் வெளியீடு தாமதமானது.
தொடர்ந்து, ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாகியதால் அதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஜனநாயகன் படத்தை அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் பட விவகாரத்தில் எந்த அளவு உதவ முடியுமோ அதனைச் செய்துகொடுப்போம் என்றும் சுப்பிரமணியன் கூறினார்.
இந்நிலையில் தான் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அதைப்பற்றி நான் பதில் சொல்ல வேண்டியதில்லை” என்றார். தொடர்ந்து படம் லீக் ஆனதற்கு உதயநிதியை சம்பந்தப்படுத்தி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளதைக் குறிப்பிட்டு நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு, “அது தெரியவில்லை. ஆதவ் அர்ஜுனா செய்திகளை நான் படிப்பதில்லை” என்று பதிலளித்தார்.
இதனிடையே, ஜனநாயகன் படம் ஆன்லைனில் கசிய விடப்பட்ட விவகாரத்தில் 6 பேரை கைது செய்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புகார் நேற்று கொடுக்கப்பட்ட நிலையில் புகார் கொடுத்த ஒரே நாளில் சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கையாக 6 பேரை கைது செய்துள்ளனர்.

