மும்பை இந்தியன்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. பெரிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 222 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்தது. பெரிய இலக்கை துரத்தும்போதும் வீரர்கள் போராடினர். ஆனால் பந்துவீச்சில் அணிக்கு பெரிய பிரச்னைகள் இருந்தன. அனுபவமிக்க பௌலர்கள் இருந்தும், ஆர்சிபி பேட்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மும்பை தோல்விக்கான முக்கிய காரணம் பவர்பிளே பந்துவீச்சு.
இந்த சீசனில் மும்பை அணியால் பவர்பிளேவில் விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் தவிப்பு நீடிக்கிறது. ஆர்சிபி தொடக்க வீரர் ஃபில் சால்ட் இதை முழுமையாக பயன்படுத்தி அதிரடியாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார். மேலும், ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் ஆடிய வேகமான இன்னிங்ஸ் போட்டியின் போக்கையே மாற்றியது. அவர் 17 பந்துகளில் அரைசதம் அடித்து, 53 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டம் ஆர்சிபி ரன்ரேட்டை தொடர்ந்து உயர்த்தியது.மும்பை அணியின் ஸ்பின்னர்களும் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. மார்க்கண்டே, சான்ட்னர் உள்ளிட்டோர் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர். மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாததால் ஆர்சிபி சுலபமாக ரன்கள் சேர்த்தது. மும்பையின் முக்கிய ஆயுதமான ஜஸ்பிரித் பும்ராவும் இந்தப் போட்டியில் விக்கெட் எடுக்க முடியவில்லை. அவர் சிக்கனமாக பந்துவீசியாலும், எதிரணியின் கூட்டணியை உடைக்க முடியாதது மும்பைக்கு பாதகமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீதும் கேள்விகள் எழுந்துள்ளன. பௌலிங் மாற்றங்கள், ஃபீல்டிங் செட்டிங் உள்ளிட்ட சில முடிவுகள் அணிக்கு பாதகமாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப என்ன மாற்றங்கள் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

