அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவரது மூத்த மகன் கௌதமசிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இதனிடையே நேற்றைய தினம் சென்னை மற்றும் விழுப்புரத்தில் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 13 மணி நேரம் நடந்த இந்த சோதனைக்குப் பின் அதிகாரிகள் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர்.
அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்ற நிலையில் இருவரும் வீட்டுக்கு சென்றார். அவரை மீண்டும் இன்று மாலை ஆஜராக அமலாக்கத்துறையினர் கூறிய நிலையில் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி இருவரும் ஆவணங்களுடன் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். இதனிடையே பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்றது குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அதில் சந்தேகத்திற்கு இடமான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் ரூ.13 லட்சம் (தோராயமாக), கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுள்ளது. மேலும் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

