தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நியூ யார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற 34வது ஆண்டு “ஏழைகளுக்கு உணவு வழங்குதல்” தொண்டு விழா, அமெரிக்காவின் Hicksville United Methodist Church மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 4, 2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற இந்த சேவை நிகழ்வில் சங்க உறுப்பினர்கள், மாணவர் தன்னார்வலர்கள் மற்றும் சமூகத் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் காலை முதலே தொடங்கப்பட்டன. உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றுகூடி, உணவுப் பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் மேசைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் Rev. Iwy Patel-Yatri பிரார்த்தனை செய்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார். மேலும், நியூ யார்க் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து செய்து வரும் சமூகப்பணிகளை அவர் பாராட்டி நன்றியும் தெரிவித்தார். இந்த சேவை நிகழ்வின் மூலம் தேவையுடைய பலருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு உணவுப் பையிலும் ஆப்பிள், ஆரஞ்சு, நூடுல்ஸ் கோப்பை, தானியப் பெட்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், ஜூஸ் பாட்டில், மஃபின் அப்பம், பாட்டில் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் Target அல்லது Dunkin’ Donuts பரிசு அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு ஈஸ்டர் வார இறுதியுடன் இணைந்து நடைபெற்றதால், பயனாளர்களுக்கு இனிய ஈஸ்டர் வாழ்த்துகளுடன் கப் கேக்குகளும் வழங்கப்பட்டன. மாணவர் தன்னார்வலர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சேவையில் ஆர்வத்துடன் செயல்பட்டனர். நிகழ்ச்சி நிறைவில் மீதமிருந்த உணவுப் பொருட்கள் அருகிலுள்ள மிஷன் மையத்திற்கு வழங்கப்பட்டதுடன், சில பொருட்கள் Trinity Lutheran Church தேவாலயத்தின் “Small Blessing Box” இலும் வைக்கப்பட்டன. தேவையுடையவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதியம் 12 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது. சமூக அக்கறை, இரக்கம் மற்றும் மனிதநேய பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தொண்டு விழா, நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவையின் சிறப்பை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியது.

